இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணி சார்பில் மயங்க் அகர்வால் 215 ரன்களையும், ரோகித் சர்மா 176 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே அஸ்வின் பந்துவீச்சில் தடுமாறியது. இதன் மூலம் அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 111 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து 71 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமடித்து அசத்திய மயங்க் அகார்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மறுமுனையில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா எதிரணி பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 10 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என 127 ரன்களை விளாசித் தள்ளினார்.
அவருடன் இனைந்து தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவும் தனது பங்கிற்கு 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 81 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜடேஜா, கோலி இணை அதிரடி காட்டியது. இதில் ஜடேஜா 32 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 40 ரன்களை வெளுத்து வாங்கினார். இதன் மூலம் இந்திய அணி கடைசியாக எதிர்கொண்ட 10 ஓவர்களில் 94 ரன்களைக் குவித்தது.
அதன்பின் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி 31 ரன்களுடனும், அஜின்கியா ரஹானே 27 ரன்களுடனும் ஆட்டமிழாக்கமல் இருந்தனர்.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. அதைத்தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரரான டீன் எல்கர் மூன்று ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாடேஜாவிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் 3 ரன்களுடனும், டி ப்ரூயின் 5 ரன்களுடனும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். நாளை தொடங்கவுள்ள ஐந்தாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 384 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அறிமுக போட்டியை நினைவு கூர்ந்த யுவராஜ் சிங்!