இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். கேரளாவை சேர்ந்த இவர், 2013 ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடினார். அந்தத் தொடரில் இவரும், இவரது சக வீரர்களான அஜித் சண்டிலா, அன்கித் சவான் ஆகியோர் மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் சிக்கினர். இதனால், டெல்லி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட ஸ்ரீசாந்த், ஜாமின் மூலம் வெளியே வந்ததுடன் தான் குற்றமற்றவர் என்பதையும் நிரூபித்தார்.
ஆனால், அதேசமயத்தில் ஆகஸ்ட் 2013இல் இந்திய கிரிக்கெட் வாரியம் இவருக்கும் அஜித் சண்டிலா, அன்கித் சவான் ஆகியோருக்கும் ஆயுட்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப், ஸ்ரீசாந்த்தின் தண்டனை குறைப்பது குறித்து பரிசீலிக்கும் படி பிசிசிஐ-க்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், பிசிசிஐ மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் உச்சநீதிமன்ற நிதீபதி டி.கே. ஜெயின், ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தண்டனையை ஏழு ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். பந்துவீச்சாளராக அவரது வயதை கருத்தில் கொண்டு அவரது தண்டனை குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த தடையானது 2013இல் இருந்து கணக்கிடப்படும். இதனால், இவர் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீசாந்த் கூறுகையில், 'கடவுள் எனக்கு தந்த ஆசிர்வாதத்தால் எனது தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது. தண்டனைக் காலம் முடிந்தவுடன் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுப்பதே எனது கனவு' என்றார்.
ஸ்ரீசாந்த்தின் தடை அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதியோடு முடிவடைகிறது. 36 வயதான இவர், இந்திய அணிக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர், 2011 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.