இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43, கேப்டன் மொமினுல் ஹாக் 37 ரன்கள் அடித்தனர்.
இந்திய பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷமி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்திருந்தது.
மயாங்க் அகர்வால் 37 ரன்களுடனும் புஜாரா 43 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் புஜாரா 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
எனினும் மயாங்க் அகர்வால் நிதான ஆட்டத்தால் இந்திய அணி 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை எடுத்திருந்தனர். மூன்றாம் நாளான இன்று இந்திய அணி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதன்மூலம் முதல் இன்னிங்சில் வங்கதேசத்தை விட இந்திய அணி 343 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாட்மேன் இஸ்லாம் 4 ரன்களும் இம்ரூல் கையிஸ் 5 ரன்களும் எடுத்து விளையாடிவருகின்றனர்.
இதையும் படிங்க: முதல் டெஸ்ட்: மயாங்க் அகர்வால் மீண்டும் சதம் - இந்தியா அபாரம்