கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு அடுத்தப்படியாக அதிக ஆண்டுகள் மற்ற அணிகளை ஆதிக்கம் செய்தது ஆஸ்திரேலிய அணிதான். 1999 முதல் 2009 வரை டெஸ்ட், ஒருநாள் என இரண்டு விதமான போட்டிகளில் எங்குப் பார்த்தாலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகளும் சாதனைகளும்தான் வரலாற்றில் பொறிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் என்றால் சொல்லவே வேண்டாம் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்திறன் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் படைத்த முக்கியமான சாதனையை, தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி முறியடித்துள்ளது.
பொதுவாக, இந்திய அணி சொந்த மண்ணில் வலுவான அணி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தற்போது, தென் ஆப்பிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இதையடுத்து, இன்று புனேவில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்திய அணி 2012-13-க்கு பிறகு சொந்த மண்ணில் கைப்பற்றும் 11ஆவது டெஸ்ட் தொடர் இதுவாகும். இதன் மூலம், சொந்த மண்ணில் அதிகமான டெஸ்ட் தொடர் வெற்றிகளை தொடர்ந்து கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் சாதனையை (10) இந்திய அணி முறியடித்துள்ளது.
சொந்த மண்ணில் தொடர்ந்து அதிக தொடர்களை வென்ற அணிகளின் விவரம்:
- இந்தியா - 11 (2012-13 முதல் தற்போதுவரை)
- ஆஸ்திரேலியா - 10 (1994-95 முதல் 2001 வரை)
- ஆஸ்திரேலியா -10 (2004 முதல் 2008-09 வரை )
- வெஸ்ட் இண்டீஸ் -08 (1975-76 முதல் 198-86 வரை)