இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடை பெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் விக்கெட்டை தீபக் சாஹர் விரைவில் கைப்பற்றினாலும், அடுத்து வந்த பிரண்டான் கிங்குடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் லிவிஸ் அதிரடியாக ஆடி, இந்திய வீரர்களின் பந்துகளைச் சிதறடித்தார். நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்ட லிவிஸ் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
லிவிஸ் விக்கெட்டை எடுத்து நிம்மதியடைந்த இந்திய வீரர்களுக்கு அடுத்த தலை வலியாக ஹெட்மைர் களமிறங்கினார். அவரும் தன் பங்குக்கு அரை சதம் விளாசினார். பின்னர், களமிறங்கிய கேப்டன் பொல்லார்டும் ஜெசன் ஹோல்டரும் கடைசி நேரத்தில் காட்டு அடி அடித்து அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர்.
20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து, கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
மிகப்பெரிய இலக்கை எதிர்நோக்கி ஆடவந்த இந்திய அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தாலும், 3.2 ஓவரில் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அதிரடி ஆட்டக்காரர் ஹிட் மேன் ரோஹித் சர்மா 8 ரன்களில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரர் ராகுல் அதிரடியாக 44 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இக்கட்டான நிலையில், கேப்டன் கோலி களமிறங்கியுள்ளார்.
சேஸிங் கிங் என்று அழைக்கப்படும் கோலி இலக்கை எட்டி இந்திய அணியை வெற்றிபெறச் செய்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, 9.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆடி வருகிறது.
இதையும் படிங்க: விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் மேஜிக் செய்த தென் ஆப்பிரிக்க வீரர்!