இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 145 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது.
இருப்பினும் முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலையைப் பெற்றது. அதன்பின் 33 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய அக்சர் பட்டேல் முதல் மூன்று பந்துகளில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் தொடர்ந்து விக்கெட் வேட்டையை நடத்திய அக்சர் பட்டேலுடன் ரவிச்சந்திரன அஸ்வினும் இணைந்து எதிரணி பேட்டிங் வரிசையைப் நிர்மூலமாக்கினர். இதில் அக்சர் பட்டேல் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய போது சர்வதேச டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் இணைந்தார்.
மேலும் குறைந்த போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதனால், இங்கிலாந்து அணி 81 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 5 விக்கெட்டும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். மீதமிருந்த ஒரு விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் லபக்கினார். இதன் மூலம் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 49 ரன்களை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது. தற்போது வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - சுப்மன் கில் இணை விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: சர்வதேச டெஸ்டில் 400 விக்கெட்- புதிய மைல் கல்லை எட்டிய அஸ்வின்!