இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வென்ற நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக பந்துவீச்சாளர் ஜோஷ் ஹசல்வுட் சேர்க்கப்பட்டார். மறுமுனையில், இந்திய அணி எந்த வித மாற்றமும் செய்யாமல் இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்களுடனே இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வார்னர், இந்தியப் பந்துவீச்சாளர் ஷமியின் பந்துவீச்சில் மூன்று ரன்களுக்கு நடையைக் கட்டினார். அதன் பின் சிங்கிள் எடுக்க ஸ்டீவ் ஸ்மித்துடன் களத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ரன் அவுட்டானார். இதனால், ஆஸ்திரேலிய அணி 8.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 46 ரன்களை எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லபுசானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே நேர்த்தியான ஷாட்டுகளை விளையாடிய லபுசானே ஒருநாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். இந்த ஜோடி 127 ரன்களை சேர்த்த நிலையில், லபுசானே ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஐந்தாவது வரிசையில் சர்ப்ரைஸாக களமிறங்கிய மிட்சல் ஸ்டார்க் வந்த வேகத்திலேயே ஜடேஜா பந்துவீச்சில் டக் அவுட்டானார். ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டியில் தனது ஒன்பதாவது சதத்தைப் பதிவு செய்தார். ஒருநாள் போட்டியில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு பின் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.
இதையடுத்து, அவருக்கு ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து விளையாடி வந்த அலெக்ஸ் கேரி 35 ரன்களில் அவுட்டானார். பின் டர்னர் நான்கு ரன்களில் அவுட்டாக மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
48 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 273 ரன்கள் எட்டிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களுக்கு ஷமி பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரி, ஒரு சிக்சரும் அடங்கும். ஸ்டீவ் ஸ்மித்தை தொடர்ந்து வந்த பேட் கம்மின்ஸ் பூஜ்ஜியத்திலும், ஆடம் ஸாம்பா ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 286 ரன்களை எடுத்துள்ளது. அஷ்டன் ஏகார் 11 ரன்களுடனும், ஹசல்வுட் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி நான்கு, ஜடேஜா இரண்டு, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இதையும் படிங்க: ஸாம்பா சுழலில் சிக்குகிறாரா கோலி?