ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்று வந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி சாதித்தது.
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கியது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்:
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வார்னர் ஒரு ரன்னிலும், மார்கஸ் ஹாரிஸ் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டெஸ்டில் தனது நான்காவது சதத்தைப் பதிவு செய்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் டிம் பெய்ன் 50 ரன்களை சேர்த்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 115.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா மூன்று விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தியா முதல் இன்னிங்ஸ்
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் சுப்மன் கில் 7 ரன்களிலும், புஜாரா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மாவும் 44 ரன்களில் ஆட்டமிழந்து அரை சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - மயாங்க் அகர்வால் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அகர்வால் 38 ரன்களிலும், ரஹானே 37 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
வாஷிங்டன் - ஷர்தூல் அசத்தல்
பின்னர் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் - ஷர்தூல் தாக்கூர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை ஃபாலோ-ஆனிலிருந்து மீட்டெடுத்தனர். மேலும் இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதலாவது அரை சதத்தையும் பதிவு செய்தனர்.
இதனால் இந்திய அணி 111.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஷர்தூல் தாக்கூர் 67 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹெசில்வுட் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸி
அதன்பின் 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருப்பினும் ஹாரிஸ் 38 ரன்களிலும், வார்னர் 48 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
சிராஜ் ஐந்து விக்கெட்:
அதன்பின் வந்த ஆஸ்திரேலிய வீரர்களில் ஸ்மித் நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். பின்னர் ஷர்தூல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 55 ரன்களை எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது சிராஜ் ஐந்து விக்கெட்டுகளையும், ஷர்தூல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு
பின்னர் 328 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நான்காம் நாளின் கடைசி செஷனில் களமிறங்கிய இந்திய அணி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று (ஜன.19) 324 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஐந்தாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணியில், ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
நிலைத்து ஆடிய சுப்மன் கில் - புஜாரா
பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - புஜாரா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கியது. இதில் சுப்மன் கில் அரைசதம் கடந்தார். மேலும் இந்த இணை பார்ட்னர்ஷிப் முறையில் 100 ரன்களை கடந்தும் அணிக்கு உதவியது.
ஒரு முனையில் புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த சுப்மன் கில், சர்வதேச டெஸ்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷ்ப் பந்த்
அவரை தொடர்ந்து வந்த கேப்டன் ரஹானேவும் அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி 24 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் புஜாராவுடன் இணைந்து ரிஷப் பந்த் பொறுமையாக விளையாடி வருகிறார்.
இப்போட்டியில் இரண்டு ரன்கள் எடுத்திருந்த போது ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்தார். மேலும் குறைந்த போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். முன்னதாக இச்சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி படைத்திருந்தார்.
ரிஷப் பந்த் அரைசதம்
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா அரைசதம் கடந்தார். தொடர்ந்து எதிரணி பந்துவீச்சாளர்களைச் சோதித்து வந்த புஜாரா 211 பந்துகளில் 56 ரன்களை எடுத்திருந்த போது கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
பின்னர் ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த மயாங்க் அகர்வால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி பந்த், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது அரைசதத்தைப் பதிவுசெத்தார்.
இதனால் கடைசி 15ஓவர்களில் இந்திய அணி வெற்றி பெற 63 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இப்போட்டி டிராவில் முடியுமா? அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது.
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி
அதன்பின் ரிஷப் பந்த்துடன் இணைந்த வாஷிங்டன் சுந்தரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை அதிகரித்தனர். இதனால் ஆட்டம் முடிவதற்கு 2 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும், ரஹானே தலைமையிலான இந்திய அணி அறிமுக வீரர்களைக் கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கோப்பையையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.
மேலும் பிரிஸ்பேனில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், 1988ஆம் ஆண்டிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணி கபா கிரிக்கெட் மைதானத்தில் தோல்வியைத் தழுவிவுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கபா கிரிக்கெட் மைதானத்தில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய சிந்து, ஸ்ரீகாந்த்!