சிட்னியில் நடைபெற்று வரும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜனவரி 9) தொடங்கியது. 242 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் ரஹானே 5 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் தொடங்கினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 22 ரன்களில் ஆட்டமிழக்க, அவரையடுத்து வந்த ஹனுமா விஹாரியும் 4 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த புஜாரா - ரிஷப் பந்த் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் புஜாரா அரை சதமும் கடந்தார். பின்னர் 50 ரன்களில் புஜாரா ஆட்டமிழக்க, அவரையடுத்து 36 ரன்களில் ரிஷப் பந்தும் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இருப்பினும் மறுமுனையில் அஸ்வின், சைனி, பும்ரா என அடுத்தடுத்த விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது.
இதனால் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சுப்மன் கில், புஜாரா ஆகியோர் தலா 50 ரன்களை எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் நான்கு விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதன் மூலம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை விட 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.
இதையும் படிங்க: பிப்ரவரியில் தொடங்குகிறது பிஎஸ்எல் சீசன் 6!