கோவிட்-19 பெருந்தொற்றினால் இதுவரை உலகம் முழுவதும் 46 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இப்பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகின் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மேலும் பல விளையாட்டுத் தொடர்களும் முற்றிலுமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக உலகக்கோப்பைத் தொடர் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்துவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. அதன்படி காணொலி வாயிலாக ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் வருகிற மே 28ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஐசிசி அலுவலர் கூறுகையில், "டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்துவது குறித்த முடிவுகளை எடுக்க மே 28ஆம் தேதி அனைத்து நிர்வாகிகள் கூட்டத்தினை ஐசிசி கூட்டவுள்ளது.
அக்கூட்டத்தின்போது உலகக்கோப்பைத் தொடரை நடத்துவது குறித்தான விவாதங்களை ஐசிசி மேற்கொள்ளவுள்ளது. அதேசமயம் இத்தொடரைத் தள்ளிவைப்பது குறித்தான விவாதமும் நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தற்போது கோலியைவிட பாபரே சிறந்தவர் - அடில் ரஷித்!