ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று (பிப்.27) மெல்போர்னில் நடைபெறவுள்ள ஒன்பதாவது போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதுகிறது.
இந்த தொடரில், இந்திய அணியை பொறுத்தவரையில், விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் வலுவான நிலையில் உள்ளது.
மறுமுனையில், நியூசிலாந்து அணி இந்த தொடரில் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டது.
குறிப்பாக, பூனம் யாதவ் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்றால் இந்திய வீராங்கனைகள் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
காய்ச்சல் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்காத இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இன்றைய போட்டியில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியை பொறுத்தவரையில் கேப்டன் சோபி டிவைன் மிரட்டலான ஃபார்மில் உள்ளார். அவர் தொடர்ந்து ஆறு டி20 போட்டிகளில் அரைசதம் அடித்து நியூசிலாந்து அணியின் பேட்டிங்கிற்கு முக்கிய பங்காற்றிவருகிறார்.
இதனால், இன்றைய போட்டியில் அவரை விரைவில் அவுட் செய்ய இந்திய அணி ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முன்னதாக, 2018 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
ஆனால், அதன்பின் இந்திய அணி நியூசிலாந்துடனான மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியடைந்தது. இதனால், இன்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடனான தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகிறது.
இதையும் படிங்க: இந்தியப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட மேக்ஸ்வேல்!