19 வயது உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவிலுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் (57), திவ்யான்ஷ் சக்சேனா (52) ஆகியோர் தலா அரைசதம் அடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர்.
இதனால் இந்திய அணி 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் நியூசிலாந்து அணிக்கு டி/எல் முறைப்படி 23 ஓவர்களில் 192 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 192 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோயின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், அந்த அணி 21 ஓவர்களின் முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரிஸ் மரியு 42 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய் நான்கு, அதர்வா அங்கோலேக்கர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால், இந்திய அணி டி/எல் முறைப்படி இப்போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்ற்றி இந்திய அணியின் வெற்றிக்கு துணையாக இருந்த ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதைத்தொடர்ந்து, வரும் 28ஆம் தேதி போட்செஃப்ஸ்டூரும் நகரில் நடைபெறவுள்ள முதல் காலிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியா ஓபனில் சதமடித்து அசத்திய ஃபெடரர்!