யு-19 தொடரின் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. இந்தத் தொடரில் வங்கதேச அணி கோப்பையைக் கைப்பற்றினாலும் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.
அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 6 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், நான்கு அரைசதம் அடித்து 400 ரன்களைக் குவித்துள்ளார். இவருக்கு பின் இரண்டாவது இடத்தில் ரவிந்து ரசந்தா 6 போட்டிகளில் ஆடி 286 ரன்களைக் குவித்துள்ளார்.
இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் யு-19 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால், அதிக வீரர்கள் குவித்த இந்திய வீரர்களான ஷிகர் தவான் (505 ரன்கள் - 2004), புஜாரா (349 ரன்கள் - 2006), ஷ்ரிவஸ்தவா (262 ரன்கள் - 2008) ஆகியோரோடு யஷஸ்வி இணைந்துள்ளார். இந்தத் தொடரின் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஷ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் 6 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவருக்கு பின் ஆஃப்கானிஸ்தான் வீரர் சஃபிக்குல்லா கஃபாரி 5 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தத் தொடரின் ஆஃப்கானிஸ்தான் வீரர் சஃபிக்குல்லா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: புஷ்ஃபயர் கிரிக்கெட் 7.7 மில்லியன் டாலர் வசூல்