இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 110 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலிய அணி 108 புள்ளிகளுடனும் இருக்கின்றன.
இதில் வீரர்களுக்கு இடையிலான தரவரிசைப் பட்டியலில் வழக்கம்போல் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் விராட் கோலி இரண்டாம் இடத்திலும் நீடிக்கிறார்.
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஒரு இடம் பின்தங்கி நான்காவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் புதிய சென்சேஷன், மார்னஸ் லபுஷானே மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.
இதற்கிடையே இந்திய அணியின் புஜாரா ஏழாவது இடத்திலும், ரஹானே 9ஆவது இடத்திலும் இருக்கின்றனர். இந்திய அணியின் மயாங்க் அகர்வால் டாப் 10இல் இருந்து வெளியேறி, 11ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் பட் கம்மின்ஸ் முதலிடத்திலும், நியூசிலாந்தின் வாக்னர் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட்களிலும் சிறப்பாக செயல்பட்ட சவுதி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் பும்ரா 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், நியூசிலாந்து அணியின் போல்ட் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக ஆடினாலும் தரவரிசைப் பட்டியலில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: 'இலங்கை வீரர்களுக்கு கை கொடுக்க மாட்டோம்' - ஜோ ரூட்