மவுண்ட் மௌங்கனுய் நகரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது. இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் வெல்லும் முதல் டி20 தொடர் இதுவாகும். இதுமட்டுமின்றி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.
இந்நிலையில், டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், பேட்ஸ்மேன்களின் வரிசையில், கே.எல். ராகுலும், பந்துவீச்சாளர்களின் வரிசையில் பும்ராவும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் ஆறாவது இடத்திலிருந்த கே.எல். ராகுல், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 224 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றதால் அவர் தற்போது 823 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
13ஆவது இடத்திலிருந்த ரோஹித் சர்மா 10ஆவது இடத்தையும், 118ஆவது இடத்திலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 55ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில், இந்திய அணியின் கேப்டன் கோலி 673 புள்ளிகளுடன் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இப்பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 879 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
அதேபோல, பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் 37ஆவது இடத்திலிருந்த பும்ரா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 26 இடங்கள் முன்னேறி 630 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தை பிடித்துள்ளார். 40ஆவது இடத்திலிருந்த சுழற்பந்துவீச்சாளர் சாஹல் தற்போது 622 புள்ளிகளுடன் 30ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதில், ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான், முஜிப்-உர்-ரஹ்மான், நியூசிலாந்து வீரர் மிட்சல் சான்ட்னர் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
-
Full rankings release ⬇️https://t.co/FQiB5gafVG
— ICC (@ICC) February 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Full rankings release ⬇️https://t.co/FQiB5gafVG
— ICC (@ICC) February 3, 2020Full rankings release ⬇️https://t.co/FQiB5gafVG
— ICC (@ICC) February 3, 2020
இதையும் படிங்க: கோபத்த கொஞ்சம் கொறச்சுக்கோமா...!' - மகளுக்கு அறிவுரை கூறும் வார்னர்