கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டாலும், பார்வையாளர்களின்றியே போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்த ஐசிசி திட்டமிட்டிருந்தது.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் பார்வையாளர்களின்றி தொடர் நடத்த முடியுமா, இந்த ஆண்டு இறுதிக்குள் கரோனா வைரஸ் சூழல் கட்டுக்குள் கொண்டு வரப்படுமா என்ற பல கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தன. இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டது.
டி20 தொடர் நடத்துவது குறித்து ஐசிசி சார்பாக மே 28ஆம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பைத் தொடர் 2022ஆம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஐசிசி அலுவலர் ஒருவர் பேசுகையில், ''ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்திவைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதைப்பற்றி நாளை நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும். அதன் பின்னர் அறிவிப்பு வெளியாகும்'' என்றார்.
டி20 உலகக்கோப்பைத் தொடர் ஒத்திவைக்கப்பட்டால், அந்த மாதத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ரசிகர்கள் இடையே கிசுகிசுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிகமான டிஆர்எஸ் வாய்ப்பு குறித்து அனில் கும்ப்ளே விளக்கம்!