இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். இவர் இந்திய அணிக்காக 164 டெஸ்ட், 344 ஒருநாள் போட்டிகள் என இரண்டிலும் சேர்த்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார். இவரை கௌரவிக்கும் விதமாக கடந்தாண்டு இவருக்கு ஐசிசியின் ஹால் ஆஃப் பேம் விருது வழங்கப்பட்டது.
இதன்மூலம் ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம்பிடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் டிராவிட் பெற்றார். இந்நிலையில் ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம்பிடித்திருந்த ராகுல் டிராவிட்டின் பெயருக்கு கீழ் இருந்ததைக் கண்ட ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். காரணம் அந்தப் பக்கத்தில் டிராவிட் இடக்கை பேட்ஸ்மேன் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அடிப்படையில் வலது கை பேட்ஸ்மேனான டிராவிட் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தபடியாக உள்ளார். இதுபோன்று மகத்தான சாதனைகளைப் படைத்த வீரர் குறித்து ஐசிசி தவறாகப் பதிவிட்டதற்கு ரசிகர்கள் கடும் விமர்சனங்களைத் தொடுத்தனர். ரசிகர்களின் கோபத்தைக் கண்டபின் ஐசிசி தங்களின் தவறை திருத்தி டிராவிட் வலது கை பேட்ஸ்மேன் எனத் திருத்தம் செய்தது.