உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடைபெறாத வகையில், இம்முறை இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பல்வேறு திருப்புமுனைகளுடன் நடைபெற்றது. இப்போட்டியில் இரு அணிகளும் 241 ரன்கள் அடித்து போட்டி சமனில் முடிந்தாதல், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஆனால், சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது.
இருப்பினும் 26-17 என்ற பவுண்டரி கவுண்ட்(Boundary count) விதிமுறைப்படி இங்கிலாந்து அணியை உலக சாம்பியன் என ஐசிசி அறிவித்தது. சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், பிரட் லீ உள்ளிட்ட பல்வேறு வீரர்களும் ஐசிசியின் விதிமுறைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடர் பவுண்டரி கவுண்ட் விதிமுறையை நிராகரித்து, சூப்பர் ஓவரில் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதன்படி, தொடரின் இறுதிப் போட்டியின் சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால், வெற்றியாளரை தீர்மானிக்கும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர் நடைபெறும் என அறிவித்தது. டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஆண்டுக்கான பிக் பாஷ் டி20 தொடரிலிருந்து இந்த விதிமுறை அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பவுண்டரி கவுண்ட் பேச்சுக்கே இங்க இடமில்லை - கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டவட்டம்
தற்போது பிக் பாஷை பின்தொடர்ந்து ஐசிசியும் சூப்பர் ஓவரில் பல முக்கியமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஒருநாள், டி20 உலகக்கோப்பைத் தொடர்களின் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தால் பவுண்டரி கவுண்ட் விதிமுறைக்கு பதில் வெற்றியாளரை தீர்மானிக்கும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதேசமயம், லீக் போட்டிகளில் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தால் பிறகு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.