உலக அளவில், EDTECH (தொழில்நுட்பத்தின் உதவியோடு கல்வியை போதிக்கும் முறை) நிறுவனங்களில் பைஜூஸ் நிறுவனத்திற்கு தனி இடம் உள்ளது. சிறிய நிறுவனமாக தொடங்கிய இந்நிறுவனம், கடின உழைப்பினால் தற்போது கிரிக்கெட்டின் விளம்பரதாராக வளம் வர தொடங்கியுள்ளது. ஐசிசி, பைஜூஸ் நிறுவனத்தை உலகளாவிய விளம்பரதாராக 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை அறிவித்துள்ளது. இதன் மூலம், ஐ.சி.சியின் ஆடவர் டி20 உலகக் கோப்பை, நியூசிலாந்தில் நடைபெறும் ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து ஐ.சி.சி நிகழ்வுகளிலும் விளம்பரதாராக பைஜூஸ் திகழக்கூடும்.
இதுமட்டுமின்றி, புதுமையான மார்க்கெட்டிங் மூலம் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க ஐசிசியுடன் இணைந்து செயல்பட பைஜூஸ் முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2019 இல், பைஜூஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி கூட்டாளராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.சி தலைமை நிர்வாகி மனு சாவ்னி கூறுகையில், " பைஜூஸ் இந்தியாவில் கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறது. பல மில்லியன் மாணவர்களை கனவு காண தூண்டுகின்ற ஒரு வலுவான, ஆற்றல் மிக்க இந்திய பிராண்டோடு கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கல்வி, விளையாட்டு இடையே வெற்றிகரமான ஒருங்கிணைப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்றார்.
பைஜூஸின் தலைமை நிர்வாக அலுவலர் பைஜு ரவீந்திரன் கூறுகையில், " ஐ.சி.சி உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகளாவிய அரங்கில் நம் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது, ஒரு இந்திய நிறுவனமாக எங்களுக்கு பெருமை அளிக்கிறது" என்றார்.