கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 21ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வேலைகளுக்கு செல்ல முடியாமலும், அவர்களுக்கு பென்ஷன் உதவிகள் கிடைக்காமலும் அவதிபட்டு வருவதாக சில தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐசிஏ) அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.
இதுகுறித்து ஐசிஏ தலைவர் அஷோக் மல்ஹோத்ரா கூறுகையில், 'முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதி ரீதியாக உதவ நாங்கள் முன்வந்துள்ளோம். இது வேலைக்கு செல்லமுடியாமல், வேலை இல்லாமல் தவித்துவரும் ஏழை வீரர்களுக்கு நாங்கள் செய்யும் உதவியாகும். இவ்வுதவிகளை முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மட்டும் வழங்குவது என முடிவுசெய்துள்ளோம்.
இதற்கென ஐசிஏ தரப்பில் ரூ.15 லட்சம் நிதி வழங்கவுள்ளோம். மேலும் ஐசிஏவைச் சேர்ந்த சில ஊழியர்கள் தங்களது ஊதியத்தையும் வழங்க முன்வந்துள்ளனர். இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் வீரர்கள் தலா 1000 ரூபாயாவது வழங்கு மாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘இதனை செய்தால் ஐபிஎல் நடக்கும்’ - பிராண்டன் மெக்குலம்!