உலக அளவில் இன வெறித் தாக்குதல்கள் நெடுங்காலமாகவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில், ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இன வெறித் தாக்குதலுக்கு எதிரான குரல் உலகமெங்கும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
விளையாட்டு வீரர்கள் பலரும் இன வெறியால் தாக்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் தனது கால கட்டத்தில் நடந்த இனவெறித் தாக்குதல்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நான் முதன்முதலில் 1966-67ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டேன். அந்தத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, இன வெறித் தாக்குதல் நடந்ததை கண்கூடாகப் பார்த்தேன்.
அதன் பிறகு, 1972-73இல் நான் கேப்டனாக இருந்தபோது பாகிஸ்தான் தொடர் முடிந்து, வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். எனது தலைமையில் எதிரணி வீரர்கள் மீது கருப்பினத்தவர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இனவெறித் தாக்குதல் நடத்தக் கூடாது என சக வீரர்களுக்கு கடும் எச்சரிக்கைகளை விடுத்தேன்.
”மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் வெள்ளை இனத்தவர்களைக் குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்த மாட்டீர்கள் அல்லவா? அப்போது ஏன் கருப்பினர்கள் என்ற வார்த்தையை கோபத்தின்போது பயன்படுத்த வேண்டும்?” என எனது அணி வீரர்களிடம் தெரிவித்தேன்.
அதன்பிறகு எனது அணி வீரர்கள் இனவெறித் தாக்குதலில் ஈடுபடவில்லை. எனது கால கட்டத்தில் பல வீரர்கள் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் இது குறித்து வாய் திறக்காமல் மௌனம் மட்டுமே காத்தனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை இல்லையென்றால் நிச்சயம் ஐபிஎல் ஆடுவேன்: வார்னர்