கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவில் டி20 கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் மார்ச் 29ஆம் தேதி மும்பையில் நடைபெறவிருந்தது. ஆனால், கோவிட் 19 வைரஸ் காரணமாக இந்தத் தொடர் மார்ச் 29ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்தியாவிலும் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்துவருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த வைரசால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தீவிரமடைந்துள்ள இந்த கோவிட்-19 வைரசைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஐபிஎல் தொடர் நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், "தற்போதைய சூழலில் என்னால் எதுவும் கூற இயலாது. ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டபோது எந்த நிலையில் இருந்தோமோ அதை நிலையில்தான் இருக்கிறோம். கடந்த 10 நாள்களில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. எனவே ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. காத்திருக்க வேண்டியதுதான் ஒரே வழி" என்றார்.
ஒருவேளை ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு நடைபெற வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதலிளித்த அவர், "அடுத்த சில மாதங்களுக்கான விளையாட்டு போட்டிகளுக்கான அட்டவனை ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதால், ஐபிஎல் தொடர் நான்கு மாதங்கள் கழித்து நடைபெற வாய்ப்புகள் இல்லை" எனத் தெரிவித்தார்.
அதே சமயம், ஐபிஎல் தொடர் ரத்தானால் பிசிசிஐக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு நேரிடும். இதனால், அந்த இழப்புத் தொகையை காப்பீடு மூலம் பெற முடியுமா என்பது சந்தேகம் எனத் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "அரசாங்கம் தற்போது முடங்கியுள்ளதால், காப்பீடு மூலம் பணம் பெற முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை. இந்தத் தருணத்தில் சரியான துல்லியமான பதில் அளிக்க மிகவும் கடினமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், கோவிட்-19 வைரஸ் காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிவது குறித்து கருத்து தெரிவித்த அவர், "எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வாரநாட்களில் நான் எனது வீட்டில் இருக்கிறேன் என்பது தெரியவில்லை. எனது பிஸியான அட்டவனையிலும் எனக்கு ஞாயிற்றுக்கிழமை வாரவிடுப்பு கிடைக்கும். ஆனாலும், வீட்டிலேயே இப்படி முடங்கியிருப்பது சற்று வித்தியாசமாக இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: இந்திய ரசிகர்களை ஆற்றுப்படுத்திய ’ஸ்ப்ரிங்’ பேட் வதந்திகள்... தொடரும் புதிர்!