இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும்விதமாக மே 3ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொற்றால் நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இந்த ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களது நேரத்தை செலவழித்துவருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹீமா தாஸ், இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனுமான சுரேஷ் ரெய்னாவுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார்.
அப்போது ஐபிஎல் அணிகளில் தனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்தான் மிகவும் பிடிக்கும் என ஹீமா தாஸ் கூறினார். இது குறித்து ரெய்னாவிடம் பேசிய அவர், எனக்கு சிஎஸ்கே பிடிக்க மிக முக்கியக் காரணமே தோனியும் நீங்களும்தான் என்றார்.
இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என ரெய்னாவின் கேள்விக்கு ஹீமா தாஸ், தான் முதல் வேலையாக மைதானத்தில் பயிற்சி கொள்வேன் எனப் பதிலளித்தார்.
மேலும், ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக நேரம் அதிகம் இருப்பதால், போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கடினமாக முயற்சித்துவருகிறேன் எனக் கூறினார்.
கரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு ஜூலை மாதம் நடைபெறவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்தாண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது கவனத்துகுரியது. இந்த உரையாடலின்போது, ஹீமா தாஸ், தேயிலைத் தோட்டம் அதிகம் இருப்பதால் அஸ்ஸாம் மாநிலம் இயற்கை வளம் மிகுந்த மாநிலமாகத் திகழ்கிறது. அதனால் நீங்கள் அசாமிற்கு வருகைதந்து, என்னுடன் சேர்ந்து இம்மாநிலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார்.
கடந்தாண்டில் மட்டும் ஹீமா தாஸ், 200 மீ, 400 மீ ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வடிவேலு டயலாக்கில் தோனியை கலாய்த்த சிஎஸ்கே!