சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக புஜாராவும், ஜேசன் ஹசில்வுட்டும் விளையாட இருந்தனர். ஆனால் இருவருக்குமான மோதல் உலகறிந்த விஷயம். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஆஸி., வேக பந்துவீச்சாளர் ஹசில்வுட் விலகியிருப்பதால் இருவரையும் ஒரே ஜெர்ஸியில் பார்க்க இயலாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஜனவரி மாதம் நடந்து முடிந்த பார்டர்-காவாஸ்கர் டெஸ்ட் தொடரின்போது, புஜாராவுக்கு களத்தில் பந்துவீசி வெறுத்துவிட்டதாக அணியினரிடம் ஹேசில்வுட் புலம்பியுள்ளார் என இந்திய பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் சில நாள்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார். அதை வைத்து நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
"ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் விலகியுள்ளார், புஜாராவுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசியதில் அவர் (ஹேசில்வுட்) சோர்வாகியிருப்பார்" என்று ஒரு ரசிகர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு ரசிகர், "ஹேசில்வுட் மிகவும் புத்திசாலி. அதனால் அவர் புஜாராவுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசாமல் தப்பித்துவிட்டார்" எனப் பதிவிட்டிருந்தார். இந்த இரு ட்விட்டுகளும் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று (மார்ச் 31) பயிற்சியின்போது புஜாரா சிக்சர் அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவைப் பார்த்துதான் ஹேசில்வுட் பயந்து ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக பல ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியோடு மோதுகிறது.