மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் சிவா. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர், இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி நேபாள அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் கலந்துகொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.
இந்த தொடரில் கலந்துகொண்டதன் மூலம் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் கலந்துகொண்ட முதல் தமிழர் என்ற பெருமையை சச்சின் சிவா பெற்றார். இதன் காரணமாக சச்சின் சிவாவிடம் வெற்றிக் கோப்பையை வழங்கி அனுப்பிவைத்தனர். கோப்பையுடன் இன்று சொந்த ஊர் திரும்பிய சச்சின் சிவாவிற்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் சிவா, 'நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நேபாள அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து தற்போது நான் ஒருவர் மட்டுமே இந்திய மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணியில் தேர்வாகி உள்ளேன். என்னைப்போல் மற்ற மாற்றுத்திறனாளிகளும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும். 2020ல் மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அதில் கண்டிப்பாக இடம் பெறுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.
இதையும் படிங்க: #CPL2019: இவரா இப்படி...! - ருத்ரதாண்டவமாடிய டுமினி; வியந்த ரசிகர்கள்!