தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. மனநல பிரச்னை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியிலிருந்து கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக விடுப்பு எடுத்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல், இந்தத் தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஷ் டி20 தொடரில் சிறப்பாக விளையாடியதால் இவர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குச் சேர்க்கப்பட்டாதக் கூறப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், முழங்கையில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களிலிருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார். இதனால், அவருக்குப் பதிலாக இடது கை அதிரடி பேட்ஸ்மேன் டி ஆர்சி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
"ஆஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாடுவதைப் பெருமையாக எண்ணுகிறேன். ஆனால், முழங்கையில் காயத்தை வைத்துக்கொண்டு என்னால் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாமா எனத் தெரியவில்லை. இதனால், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன்" என மேஸ்வெல் தெரிவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை மேக்ஸ்வெல் ஏழு டெஸ்ட், 110 ஒருநாள், 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க: "வார்னர் தகுதியானவரே'' - ஆலன் பார்டர்!