இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தோனி, இறுதியாக கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடரில்தான் விளையாடினார். அதன்பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருக்கும் அவர், அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மீண்டும் அணிக்குள் ரீ-எண்ட்ரி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக டி20 உலகக்கோப்பைத் தொடர் 2022ஆம் ஆண்டிற்குத் தள்ளிவைக்கப்படும் என்ற தகவல்கள் நேற்று வெளியாகின.
இது தொடர்பாக ஐசிசி இன்று காணொலி கலந்தாய்வு வாயிலாக முடிவு எடுக்கவுள்ளது. ஒருவேளை டி20 உலகக்கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டால் தோனியின் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிடுமோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், ட்விட்டரில் நேற்று மாலை #DhoniRetires என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது. இதைத்தொடர்ந்து, தோனியின் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு அவரது மனைவி சாக்ஷி தோனி அவரது ட்விட்டர் பதிவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர், "இது வதந்தி மட்டும்தான். ஊரடங்கால் சிலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்க்கையில் ஏதாவது நல்ல விஷயத்தை செய்யுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, சில நிமடங்களிலேயே அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.
தோனி குறித்த சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளுக்கு சாக்ஷி தோனி முற்றுப்புள்ளி வைப்பது இது ஒன்றும் புதிதல்ல.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் தோனி செய்தியாளர்களைச் சந்தித்து ஓய்வு பெறப்போவதை அறிவிக்கவுள்ளார் என்ற வதந்திகள் வெளியானதற்கும் சாக்ஷி தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டால் தோனியின் எதிர்காலம் முடிவுக்கு வருமா?