உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஷஸ் டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது. இந்த இரண்டு மாதக் காலக்கட்டத்தில், தோனி எப்போது ஓய்வு பெறப்போகிறார்? தோனிக்கு மாற்று வீரராக ரிஷப் பந்த் பொறுத்தமானவரா? ரோகித் ஷர்மாவுக்கு டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவாரா? கோலியின் கேப்டன்ஷிப் சரியாக இருக்கிறதா? போன்ற பேச்சுக்கள்தான் இந்திய கிரிக்கெட்டை சுற்றியே வருகிறது.
சமூகவலைதளங்களில் ஒவ்வொரு நாளும் விவாதிக்கப்படும் இந்த விஷயத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பிர் கருத்து தெரிவித்துள்ளார்.
![Gambhir](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4561616_g.jpg)
தோனியின் ஓய்வு குறித்து கம்பிரின் பதில், "ஓய்வு என்பது தனிப்பட்ட நபரின் முடிவாகும். இந்த விவகாரத்தில் நான் எப்போதும் தெளிவாகவே இருப்பேன். தோனியின் ஓய்வு குறித்து, தேர்வுக்குழுவினர்தான் அவரிடம் பேச வேண்டும்".
தோனி இறுதியாக உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில்தான் விளையாடினார். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக கோலி அண்ட் கோ விளையாடிய டி20 தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டார்.
![Dhoni](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4561616_d.jpg)
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் தோனி இடம்பெறுவார் என எதிர்பார்த்தபோது அவர் தனது தற்காலிக ஓய்வுக் காலத்தை (rest days) நீட்டித்துள்ளதால், மீண்டும் அவருக்கு பதிலாக ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ரிஷப் பந்த் தனக்கு வழங்கும் வாய்ப்பை அவர் மோசமான ஷாட் தேர்வினால் சொதப்பி வருகிறார் என பல்வேறு தரப்பினர் அவரை விமர்சித்து வருகின்றனர்.
ரிஷப் பந்த் குறித்து கம்பிரின் கருத்து, "இந்திய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள ரிஷப் பந்த் மீதே அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். அவருக்கு 21 வயதுதான் ஆகிறது. அவர் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் விளாசியுள்ளார். அவரை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறு.
![Rishab Pant](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4561616_r.jpg)
அவருக்கு சரியான வழியில் அணி நிர்வாகம் ஆதரவு தர வேண்டும். கோலி மட்டுமின்றி, ரவிசாஸ்திரி உள்ளிட்டவர்கள் ரிஷப் பந்திடம் பேச வேண்டும். அவரை கட்டுப்படுத்த நினைத்தால், அவரால் சரியாக விளையாட முடியாது. இளம் வீரராக இருக்கும் அவருக்கு இன்னும் நீண்ட எதிர்காலம் உள்ளது".
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தப் பின், தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. கில்கிறிஸ்ட் உள்ளிட்ட வீரர்கள் அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.
![Rohit Sharma](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4561616_ro.jpg)
இதற்கு கம்பிர், "உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்த ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தர வேண்டும். மூத்த வீரரான அவரை பெஞ்சில் உட்கார வைப்பது முற்றிலும் தவறு என்றார்".
முன்னதாக, தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோரால் கோலியின் கேப்டன்ஷிப் குறைபாடுகள் வெளிப்படாமல் உள்ளது என்று கம்பிர் தெரிவித்த கருத்த சர்ச்சையானது. இந்தக் கருத்துக்கு கம்பிர் தந்த பதில்,
"ஐபிஎல் தொடரில் தோனி, ரோஹித் ஆகியோரது அணிகள் செய்த சாதனைகளை, கோலியின் ஆர்.சி.பி அணியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன்முடிவு அனைவருக்குமே தெரியும் யார் சிறந்த கேப்டன் என்று. இந்த கருத்தில் நான் எப்போதும் உண்மையாகவே இருப்பேன். கேப்டன்ஷிப்பில் சாதிக்க கோலி இன்னும் பல மைல்களைக் கடக்க வேண்டும்.
![Kohli](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4561616_kohli.jpg)
இதையும் படிங்க: தோனி, ரோஹித்தால் மட்டுமே கோலி தப்பித்து வருகிறார் - கம்பிர்!
ஐபிஎல் தொடரில் கோலி ஆர்.சி.பி அணியை சிறப்பாக வழிநடத்தினால்தான் அவரது கேப்டன்ஷிப் திறன் அறியப்படும்" இவ்வாறு கவுதம் கம்பிர் இந்திய அணியில் இருக்கும் ஒருவரையும் விட்டுவைக்காமல் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.