டிசம்பர் 19, 2020 உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கண்களும் ஐபிஎல் ஏலத்தின் மீது தான் இருந்தன. எப்போதும் இந்திய யு-19 அணியின் இளம் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த ஏலத்திலும் பெரும்பாலான யு-19 வீரர்கள் ஏலத்தில் நல்ல விலைக்கு வாங்கப்பட்டனர். ஆனால் ஒரு வீரரின் பெயர் வந்தபோது, அந்த ஏலத்தில் இருந்த அனைத்து அணிகளுமே கொஞ்சம் ஆர்வமானது. வெறும் 19 வயது வீரருக்கு ஏன் இந்த கிராக்கி என்ற யோசனை ரசிகர்கள் மனதிலும் எழுந்தன. அந்த பெயர் யஷஸ்வி ஜெய்ஷ்வால்.
இந்திய யு-19 அணியின் தொடக்க ஆட்டக்காரர் என்ற அறிமுகம் கொடுத்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ.2.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. அப்போதே இவர் எப்படி ஆடுவார் என்ற ஆர்வம் ரசிகர்களிடத்தில் தொற்றிக்கொண்டது. ஆனால் ஜெய்ஷ்வாலின் சுயரூபம் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக யு-19 உலகக்கோப்பைத் தொடரிலேயே வெளிப்பட்டுவிட்டது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தெருவுக்கு தெரு பாகிஸ்தானில் வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என சீனியர் உலகக்கோப்பையின் போது கொக்கரித்த பாகிஸ்தான் பயிற்சியாளரின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, தொடக்க வீரர்களான ஜெய்ஷ்வால் - சக்சேனா இணை விக்கெட்டுகள் இழக்காமலேயே வெற்றியை ருசித்தது. அதிலும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் வெற்றிக்கு 3 ரன்கள் இருக்கும் நிலையில், சிக்சர் அடித்து வெற்றியைக் கைப்பற்றியதோடு சதம் விளாசி அசத்தினார். சதம் விளாசிய பின், கைகளை உயர்த்தி வானத்தைப் பார்த்துவிட்டு, ஒரு ஜம்ப்... அந்த நொடி எதிர்கால இந்திய அணியை ரசிகர்களின் கண்களுக்கு காட்டிவிட்டார் ஜெய்ஷவால்.
இவரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் சோயப் அக்தர் கூறிய வார்த்தைகள் இவை, ''இளம் வீரர் ஜெய்ஷ்வால் மிகப்பெரிய இடத்திற்கு வருவார். அவருடைய ஆட்டத்தில் ஆற்றல், ஆர்வம் என அனைத்தும் இருக்கிறது. மிக விரைவில் இந்திய சீனியர் அணியில் இடம்பிடிப்பார். பாகிஸ்தான் வீரர்கள் ஜெய்ஷ்வாலின் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவரிடம் திறமையும், உத்வேகமும் இருக்கிறது. அதனால்தான் அவரைத்தேடி பணமும் வருகிறது'' என்றார்.
இப்போது ஏன் ராஜஸ்தான் அணி இவருக்கு 2.4 கோடி ரூபாய் கொடுத்தது என்பது அனைவருக்கு புரிந்திருக்கும்.
யார் இந்த ஜெய்ஷ்வால்?
உத்தரப்பிரதேசத்தில் பிறந்தாலும் , ஜெய்ஷவாலின் வாழ்க்கை மும்பையின் தெருக்களில் தான் தொடங்கியது என்று கூறலாம். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீதான ஆர்வத்தினால் மும்பையின் ஆசாத் மைதானத்திற்கு அடிக்கடி செல்லும் ஜெய்ஷ்வாலுக்கு அங்கே கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். மும்பையின் தாதர் பகுதியிலிருந்து ஆசாத் மைதானம் வருவதற்கு பெரிய விலைக்கொடுக்க வேண்டியிருந்தது.
இதனால் ஒரு கடையில் வேலையை செய்துகொண்டே, பால்பண்ணையில் கிடைத்த இடத்தில் தங்கினார். ஜெய்ஷவாலின் கிரிக்கெட் பயிற்சியால், ஒரு கட்டத்தில் அந்த கடையின் உரிமையாளருக்கு உபயோகம் இல்லாமல் போக, வேலையை விட்டு நீக்கப்பட்ட ஜெய்ஷ்வாலுக்கு சில நாள்கள் ரோடுகளில் தான் உறக்கம்.
அப்போது ஆசாத் மைதானம் சென்ற ஜெய்ஷ்வால், தனது பயிற்சியாளர் பப்பு சாருடன் ஒரு போட்டியைப் பார்த்தபோது, இருவருக்கும் இடையே ஒரு பந்தயம் நடந்தது. அது என்னவென்றால், அந்த போட்டியில் ஜெய்ஷ்வால் சிறப்பாக ஆடினால் மைதானத்திலிருக்கும் டெண்ட்டில் தங்கிக்கொள்ள அனுமதியளிக்கப்படும் என்ற பந்தயம். பின்னர் களமிறங்கிய ஜெய்ஷ்வாலின் ஆட்டத்தைப் பார்த்து, டென்ட்டில் தங்கிக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. தங்குவதற்கு பிரச்னை இல்லை... ஆனால் பசிக்கு வழித்தேட வேண்டிய தேவை ஏற்பட்டது.
அங்கே தொடங்கியது தான் பானி பூரி விற்கும் வேலை. வாழ்க்கையில் நாம் நினைத்ததை எட்டிப்பிடிக்க வேண்டும் என்றால், அதற்கான வழியைத் தேடி அந்த வழியில் சின்ன வெற்றியைப் பெறவேண்டும். முதல் வெற்றியைப் பெற்றுவிட்டால் நிச்சயம் நமக்கு தேவையானதை நாமாகவேத் தேடிக்கொள்வோம். ஜெய்ஷ்வாலுக்கு தங்குவதற்காக கிடைத்த முதல் வெற்றிதான், அவரை அவருடைய இலக்கை நோக்கி பயணம் செய்யத் தூண்டியது.
அப்போது அவருக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை அவருடைய பயிற்சியாளர் பப்பு சார் (ஜுவாலா சிங்)... அங்கிருந்து தான் அவருடைய விடியலுக்கான பயணம் தொடங்கியது...
யஷஸ்வி ஜெய்ஷவால் முதல் முறையாக மீடியாவின் வெளிச்சத்திற்கு வந்தது 2015ஆம் ஆண்டில் தான். பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 319 ரன்கள் விளாசியதோடு, 99 ரன்கள் விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகள் சாய்த்தார். அந்த சாதனை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவானது.
ஜுவாலா சிங்கின் அகாடமியில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்த பின்பு, மும்பை அணிக்கான யு-16 அணியில் இடம்கிடைத்தது. அதிலிருந்து யு-19 அணிக்கான பயணம். இந்திய யு-19 கிரிக்கெட் அணியில் இடம்கிடைத்த பின், ஜெய்ஷ்வாலின் தடங்கள் பதியாத இடங்களே இல்லை.
கடந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக ஜெய்ஷ்வால் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே இந்திய அணியில் ஆடிய வருண் ஆரோன், நதீம் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். 17 வயது சிறுவனால் சாத்தியமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம் என நினைத்த அனைவருக்கும் ஆச்சர்யம் காத்திருந்தது. அந்தப் போட்டியில் 154 பந்துகளை எதிர்கொண்டு 203 ரன்களை விளாசினார். இதன்மூலம் முதல்தர கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையும் உடைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தியோதர் டிராபி, ரஞ்சி டிராபி என பயணங்கள் தொடர்ந்து, உலகக்கோப்பைக்கான இந்திய யு-19 அணியில் இடம்கிடைக்க, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த பார்வையையும் ஜெய்ஷ்வால் தன்வசப்படுத்திக்கொண்டார்.
இந்த உலகக்கோப்பையில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் 54, 29*, 57*, 62, 105* என 156ஆவரேஜுடன் 312 ரன்கள் குவித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பார்ட் டைம் பந்துவீச்சாளர்களின் வேலை என்பது பார்ட்னர்ஷிப் பிரேக்கர்களாக இருக்கவேண்டும். அந்த வேலையை பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக செய்துகாட்டினார்.
பாகிஸ்தானின் ஹைதர் அலியை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார் ஜெய்ஷ்வால்... தன்னுடைய இளம் வயதிலேயே ஜெய்ஷ்வால் இந்தியாவின் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக மாறிவிட்டார். வாழ்க்கையை வாழ்வதற்கு யாருக்கும் இங்கு தடையே இல்லை. ஆனால் அந்த வாழ்க்கையில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற ஆயிரம் தடைகள் இருக்கும். முன்னேறுவதற்கே தடைகள் வரும் என்றால், சாதிப்பதற்கு சொல்லவா வேண்டும்.
இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப் பார்த்து பல ரசிகர்களும் அதீத விமர்சனங்களை முன் வைப்பார்கள். அவர்களில் வாழ்க்கையின் சூழ்நிலைகளால் கிரிக்கெட்டை விட்டு மடைமாறி போயிருப்பவர்கள் தான் பெரும்பான்மை. வாய்ப்பு கிடைக்காதவனுக்கும், வாய்ப்பை பெறவே முடியாதவனுக்கு தான் வாய்ப்புகளின் அருமை புரியும்.
அடுத்ததாக நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று பானி பூரி விற்ற ஜெய்ஷவாலின் கைகளில் உலகக்கோப்பையை ஏந்த வேண்டும் என்ற ஆசை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது... நடக்குமா என்பது வரும் 9ஆம் தேதி தெரிந்துவிடும்... அதுவரை காத்திருப்போம்...!
இதையும் படிங்க: கெத்தா நடந்து வரான்... காலரத்தான் தூக்கி வரான்... பும்ராவின் கதை