தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்தது.
மேலும், இத்தொடருக்கான இந்திய மகளிர் அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை (மார்ச் 7) காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இத்தொடரில் 10 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் (யுபிசிஏ) முடிவுசெய்துள்ளது.
இது குறித்து யுபிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண 10 விழுக்காடு பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க சுகாதாரத் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டு கட்டணமாக 200 முதல் 400 ரூபாய் வரை வசூலிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய மகளிர் ஒருநாள் அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூனம் ரவுத், பிரியா புனியா, யஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர், ஹேமலதா, தீப்தி சர்மா, சுஷ்மா வர்மா, ஸ்வேதா வர்மா, ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜூலன் கோஸ்வாமி, மான்சி ஜோஷி, பூனம் யாதவ், பிரதியுஷா, மோனிகா படேல்.
இதையும் படிங்க: WI vs SL: குணதிலக, சண்டகன் அபாரம் - வெ.இண்டீஸை வீழ்த்திய இலங்கை!