இந்திய அணியின் ஒப்பந்தம் இல்லாத வீரர்களைக் குறைந்தது இரண்டு வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் பேசிய சம்பவம் ரசிகர்களிடையே ஆதரவைப் பெற்றுவருகிறது. இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவரிடம் பேசுகையில், ''தனது கிரிக்கெட் வாழ்வின் முடிவில் இருக்கும் நபர்களிடமிருந்து இதுபோன்ற கருத்துகள் வருவது வழக்கமான ஒன்றுதான். அது அவர்களின் எதிர்காலங்கள் பற்றிய யோசனையாகவே பார்க்கிறோம்.
ஆனால் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் வீரர்கள் தனித்துவத்துடன் இருக்க வேண்டும் என நினைக்கிறோம். தனித்துவத்துடன் விளையாடும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் நல்ல வரவேற்பு இருப்பதை உறுதி செய்வோம்.
ஐபிஎல் தொடர்களில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் வெளிநாட்டு டி20 லீக்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட லோதா கமிட்டியின் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று. வெளிநாடுகளின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதைவிடவும் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற பாதையில் பயணித்து வருகிறோம்'' என்றார்.
இங்கிலாந்தில் தொடங்கவிருந்த தி ஹெண்ட்ரெட் டி20 தொடரில் கொல்கத்தா அணி முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்பிடபள்யூ விதிமுறைகளில் மாற்றங்கள் தேவை - இயன் சாப்பல் பரிந்துரை