ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப்படைத்தது. இத்தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் முகமது சிராஜ் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இதையடுத்து, மறைந்த தந்தையின் கனவை முகமது சிராஜ் நிறைவேற்றி விட்டதாக, அவரது சகோதரர் சமீர் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய சிராஜின் சகோதரர் சமீர், "டெஸ்ட் போட்டிகளில் சிராஜ் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது அவரது தந்தையின் கனவு. சிராஜ் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்த அவர் எப்போதும் விரும்பினார். தற்போது எங்கள் கனவு நிறைவேறியது.
நாங்கள் அவரை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சிராஜ் விளையாட்டைக் காண நாங்கள் காலை 4 மணிக்கே எழுந்திருப்போம். சிராஜ் விளையாடும் எந்த ஒரு போட்டியையும் தவறவிட்டதில்லை" என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முகமது சிராஜ், தனது தந்தை இறந்த தருவாயிலும் கூட அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் நாட்டிற்காக விளையாட வேண்டும் என ஆஸ்திரேலியாவிலேயே தங்கினார்.
இத்தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ், தனது அபார பந்துவீச்சினால் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி; வெர்மா வெற்றி!