கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரராக இருப்பவர் சர்ஃப்ராஸ் கான். இவர் 2015ஆம் ஆண்டு தனது 17 வயதிலேயே ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். மேலும் இவர் 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பைத் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இம்மாதம் நடைபெறவுள்ள சயீத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடருக்கான மும்பை அணியிலும் இடம்பிடித்துள்ளார். இது குறித்து சர்ஃப்ராஸ் கான் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், தன்னுடைய இலக்கை நோக்கி கடுமையாக உழைத்துவருவதாகத் தெரிவித்தார். சர்ஃப்ராஸ் கானுடனான நேர்காணல்...
கேள்வி: நீங்கள் 17 வயதிலேயே ஐபிஎல் தொடரில் பங்கேற்றீர்கள். உங்களது கிரிக்கெட் பயணம் குறித்து கூறுங்கள்?
சர்ஃப்ராஸ் கான்: எனது தந்தை ஒரு கிரிக்கெட் பயிற்சியாளர். அவர் விளையாடுவதை நான் சிறுவயது முதலே பார்த்துள்ளேன். அவர் முதலில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்த பயிற்சிகளை வழங்கினார். பின்னர் எனக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக நான் வெகு விரைவிலேயே இந்த விளையாட்டின் நுனுக்கங்களை என் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
கேள்வி: ஐபிஎல் 2020 மற்ற சீசன்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டது?
சர்ஃப்ராஸ் கான்: 2020 ஐபிஎல் சீசன் நிச்சயம் மாறுபட்ட ஒன்றுதான். ஏனெனில் நாங்கள் பார்வையாளர்கள் இல்லாமலும், கரோனா பாதுகாப்பு விதிகளுக்குள்பட்டும் தொடரை விளையாட வேண்டியிருந்தது. இருப்பினும் நாங்கள் எங்களுடைய முழு முயற்சியையும் வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை விளையாடினோம். போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளாலும் சாம்பியன் ஆகிவிட முடியாது, ஆனால் நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம்.
கேள்வி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டிரெஸ்ஸிங் ரூம் குறித்தும், அங்கு நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் கூறுங்கள்
சர்ஃப்ராஸ் கான்: கிறிஸ் கெய்ல் மிகவும் வேடிக்கையான ஒரு நபர். அவர் எங்கள் அணியின் பிரிக்க முடியா ஒரு உறவாக மாறிவிட்டார். அதேசமயம் அனில் கும்ப்ளேவின் பயிற்சியின்கீழ் விளையாடியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்கள் கேப்டன் கே.எல். ராகுல், அணியைச் சிறப்பாக வழிநடத்தினார், மேலும் அதிக ரன்களை எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார்.
கேள்வி: டி20 போட்டிகளைப் போலவே, நீங்கள் மற்ற விளையாட்டிலும் அதிரடியாக விளையாட புதிய யுக்திகளைக் கையாளுகிறீர்களா?
சர்ஃப்ராஸ் கான்: நான் எனது இயல்பான ஆட்டத்தை மட்டுமே கவனம் செலுத்திவருகிறேன். அதிலும் குறிப்பாக தூக்கி அடிக்கும் ஷாட்களுக்கு மட்டுமே. அதேசமயம் போட்டி குறித்து நிறைய யோசிப்பது எனக்குப் பிடிக்காது, எனக்குப் பிடித்ததெல்லாம் களத்திற்குச் சென்று விளையாடுவது மட்டும்தான்.
கேள்வி: இந்திய அணிக்காக உங்களது அறிமுகத்தை நாங்கள் எப்போது எதிர்பார்க்கலாம்?
சர்ஃப்ராஸ் கான்: கடுமையாக உழைப்பது மட்டுமே என்னால் முடியும். நான் எனது பயிற்சிகள் மூலம் ரன்களை எடுக்க முடியும், அவ்வப்போது அதனை நான் செய்துவருகிறேன். ஆனால் நான் இந்திய அணிக்காக விளையாடுவது தேர்வுக் குழுவினர் கைகளிலும், அல்லாவின் அருளிலும்தான் உள்ளது. அவர்கள் முடிவு செய்துவிட்டால் நான் நிச்சயம் இந்திய அணிக்காக விளையாடுவேன். அதுவரை நான் என்னுடைய இலக்கை நோக்கி கடுமையாக உழைத்துவருகிறேன்.
இதையும் படிங்க:இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கரோனா