இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடர் மிகவும் பரபரப்பான ஒன்றாக அமைந்நது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்த நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாக்பூரில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் வெற்றியை வங்கதேச அணி பறித்துக்கொண்டிருந்த சமயத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் பந்துவீச்சாளர் தீபக் சஹார் ஹாட்ரிக் உள்ளிட்ட ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமிப்பை ஏற்படுத்தினார்.
இதனால் இந்திய அணி அப்போட்டியில் வெற்றிபெற்றதோடு தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது. அப்போட்டியில் சஹார் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டின் மூலம் சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் எடுக்கும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் அப்போட்டியில் தீபக் சஹார் ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதே சர்வதேச டி20இல் சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது.
இதனிடையே இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஆகாஷ் சோப்ரா, தீபக் சஹார் குறித்து பத்தாண்டுக்கு முன் தான் செய்த பழைய ட்வீட்டை மறுபதிவிட்டிருந்தார். அந்த ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஆகாஷ் சோப்ராவின் அந்த ட்வீட்டில், "நான் திறமையுள்ள இளைய கிரிக்கெட் வீரர் ஒருவரை கண்டுள்ளேன். அவர் ராஜஸ்தானில் உள்ள தீபக் சஹார். அவருடைய பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் இவரிடமிருந்து பலவற்றை நீங்கள் பார்ப்பீர்கள்" எனப் பதிவிட்டிருந்தார். இதைக் கண்ட ட்விட்டர்வாசிகள் 'நீங்கள் ஒரு தீர்கதரிசி ஆகாஷ் சோப்ரா' என்பது போன்ற கருத்துகளைப் பதிவிட்டனர்.
மேலும் நீங்கள் கூறியதை தோனியும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் சீரியசாக எடுத்துக்கொண்டதால்தான் தீபக் சஹாரை தங்கள் அணியில் இடம்பெறச்செய்து அவரின் திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர் எனப் பதிவிட்டிருந்தார் ஒரு ரசிகர்.
2018ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தீபக் சஹார் தற்போது டி20 அணியில் ஒரு முக்கியமான பவுலராக உள்ளார். அதை கடந்த போட்டியில் நிரூபித்தும் காட்டியிருக்கிறார். எனவே வருங்காலங்களில் ஆகாஷ் சோப்ரா கூறியது போன்று மேலும் பல சாதனைகளை தீபக் சஹார் படைப்பாரா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.