தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 269 ரன்கள் எடுத்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணி 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், புதிதாக இடம்பெற்றிருந்த சிப்லி நிலைத்துநின்று ஆடியதில் இங்கிலாந்து அணி 391 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிப்லி 133 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 437 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 126 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய மகராஜ் 2 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த அனுபவ வீரர்களான டூ ப்ளஸிஸ் 19 ரன்களில் வெளியேறினார்.
பின் மாலன் - வாண்டர் டூசன் ஆகியோர் ஆட்டத்தை டிரா செய்ய கடுமையாகப் போராடினர். அதிலும் அறிமுக வீரர் மாலன் 288 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆட்டமிழந்த பின்னர் வந்த டி காக், டூசன் உடன் சிறிது நேரம் ஆடினார்.
பின்னர் பிராட் வீசிய பந்தில் வாண்டர் டூசன் 140 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டி காக் 107 பந்துகளில் 50 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதையடுத்து களமிறங்கிய டெய்லண்டகளை பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்ற, இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 248 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 189 ரன்களில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளை பெற்றுள்ளதால், அடுத்தடுத்த போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘நான் சொல்வதை விராட் கோலி ஏற்றுக்கொள்வார்’ - ரோஹித் சர்மா!