இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் செளதாம்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 469 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 287 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 182 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இப்போட்டியில் வெற்றிபெற 312 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமாரா ப்ரூக்ஸ் (62), ஜெர்மைன் பிளக்வுட் (55), கேப்டன் ஜேசன் ஹோல்டர் (35) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 70.1 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மூன்று விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ், டாம் பெஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் இங்கிலாந்து அணி இப்போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தத் தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இப்போட்டியில் பேட்டிங்கில் 254 ரன்களும், பவுலிங்கில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றதால், வரும் 24ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.