இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முன்னதாக செளதாம்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து தள்ளப்பட்டது. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரையில் அணியில் எவ்வித மாற்றமும் இல்லாமல் கடந்த போட்டியில் விளையாடிய 11 வீரர்களுடனே இப்போட்டியிலும் களம் இறங்கியுள்ளது. இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜோ டென்லி, ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட் ஆகியோருக்குப் பதிலாக ஜோ ரூட், சாம் கரன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும், ஜோ டென்லி 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாம் ஆட்டம் நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 260 ரன்களை சேர்த்த நிலையில் ஜோ டென்லி 120 ரன்களில் ரோஸ்டான் சேஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 356 பந்துகளில் 17 பவுண்டரி 2 சிக்சருடன் 176 ரன்கள் எடுத்திருந்த ஸ்டோக்ஸ் கீமார் ரோச் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த பட்லர் 40 ரன்களிலும், சாம் கரன் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இங்கிலாந்து அணி 162 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 469 ரன்கள் குவித்த போது தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. டாம் பெஸ் 30 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ரோஸ்டான் சேஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர் ஜான் கேம்பல் 12 ரன்களில் சாம் கரன் பந்துவீச்சில் பெவிலியனுக்கு நடையை கட்டினார். கிரேக் பிராத்வெயிட் ஆறு ரன்களுடனும், அல்சாரி ஜோசப் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.