குளோபல் டி20யின் 11ஆவது லீக் போட்டியில் கிரிஸ் கெய்ல் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணியும், முஹமது ஹபீஸ் தலைமையிலான எட்மண்டன் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற நைட்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய எட்மண்டன் ராயல்ஸ் அணி, முதல் ஆறு ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய பென் கட்டிங் அற்புதமாக விளையாடி 41 பந்துகளில் 71 ரன்களை சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. நைட்ஸ் அணி சார்பில் அலி கான் மற்றும் ஹைடென் வால்ஷ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நைட்ஸ் அணியின் கேப்டன் கிரிஸ் கெய்ல், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பெற செய்தார்.
இதன் மூலம் நைட்ஸ் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிரிஸ் கெய்ல் 44 பந்துகளில் 94 ரன்களை விளாசினார். ராயல்ஸ் அணி சார்பில் பென் கட்டிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அணியின் வெற்றிக்கு உதவிய கிரிஸ் கெய்ல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.