கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் 2022ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஐசிசி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நேற்று மாலை ஒரு குறிப்பிட்ட ட்விட்டர் பயனர்கள் #DhoniRetires என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பரப்பினர். ஆனால் தோனியைப் பின்தொடர்வோர் அத்தகவல் வதந்தி என்றும், அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் உறுதியாகக் கூறினர்.
இந்நிலையில் இது குறித்து தோனியின் சிறுவயது பயிற்சியாளரான கேசவ் பானர்ஜி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தோனி குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவர் டி20 உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டாலும் விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "தோனி மக்களை அழைத்து 'நான் ஓய்வு பெறுகிறேன்' என்று சொல்லும் நபர் அல்ல. அதை எப்படிச் செய்வது என்று அவருக்குத் தெரியும். தற்போது அதற்கான நேரம் என்று அவர் உணரும்போது, பிசிசிஐக்கு தகவல் அளித்தும், முறையான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியும் தனது ஓய்வு முடிவைப் பற்றி அறிவிப்பார். அதாவது தனது டெஸ்ட் ஓய்வை அவர் அறிவித்ததைப் போல.
அதனால் யாரும் சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஏனெனில் நாம் ட்ரெண்டிங் என நினைக்கு பல விஷயங்கள் வதந்திகளாக மட்டுமே முடிவடைந்துள்ளன.
மேலும் எனக்குத் தோனியைப் பற்றி நன்றாகத் தெரியும், அதனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கும்போது நம் அனைவரிடத்தில் அதனைத் தெரிவிப்பார் என்பதனை உறுதியாக என்னால் கூற முடியும்.
அவர் எவ்வாறு கிரிக்கெட்டில் செயல்படுவார் என்பதை ஐபிஎல் போட்டிகளில் உங்களால் காண முடியும். ஒருவேளை டி20 உலகக்கோப்பைத் தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டாலும், அதில் அவர் கலந்துகொள்வார்" என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தோனியின் மனைவி சாக்ஷி தோனி தனது ட்விட்டர் பதிவில், தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் எனச் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது அனைத்தும் வதந்திகள் மட்டுமே எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘உமிழ்நீரின்றியும் பந்தை ஸ்விங்காக்க முடியும்’ - டியூக்ஸ் உரிமையாளர்