இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ஓய்வு எப்போது என்ற கேள்வி உலகக் கோப்பைக்கு முன்பிருந்தே ஊடகங்கள், சமூக வலைதளங்களில் முக்கிய பேசு பொருளாக இருந்து வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது ஒரு சில ஆட்டங்களில் தோனி சொதப்பிய போது அவர் மீது பல முன்னணி வீரர்களும், ரசிகர்களும் விமர்சனம் எண்ணும் தோட்டாக்கள் மூலமாக அவரைத் தாக்கினர். எனினும் எதையும் கண்டுகொள்ளாமல் கருமமே கண்ணாக இருந்த தோனி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் வாயையும் அடைத்தார்.
அந்த போட்டியில் இந்திய தோல்வியடைந்ததும் ரசிகர்கள் பலரும் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை ரன்-அவுட்டில் தொடங்கி ரன்-அவுட்டில் முடிந்ததாகக் கூறி வந்தனர். ஆனாலும் தொடர்ந்து தனது ஓய்வு முடிவு குறித்து மவுனம் காத்து வந்தார் தோனி.
இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணியில் தோனி சேர்க்கப்படுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தோனி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக, அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய துணை ராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமென்ட்டில் பயிற்சி பெற விரும்புவதாக அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அதேபோன்று தோனியும் இடம்பெறவில்லை. தோனிக்கும் பயிற்சி பெறுவதற்கான அனுமதியை இந்திய ராணுவத் தளபதி வழங்கினார். இத்தனை அறிவிப்புகள் வந்த பின்பும் தோனியின் ஓய்வு குறித்த பேச்சு ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து ட்விட்டரில் மனம் திறந்துள்ள பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே கூறியதாவது, "தோனியை மற்ற வீரர்களைப் போன்று அவர் விருப்பப்படும் காலம் வரை விளையாட அனுமதிக்க வேண்டும். தேர்வுக் குழுவினர், பிற வீரர்களிடம் கேட்பதைப்போன்று தோனியின் எதிர்காலம் குறித்து அவரிடம் பேசிய பின்பே எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும். அவரது முடிவுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.