இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் கேப்டனாக மட்டுமல்லாது சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் பல சாதனைகளை படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றிய பின் இந்திய கிரிக்கெட் அணியின் பொறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக தோனி வசம் சென்றது.
அதன் பின்னர் ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கு தலைமை தாங்கிய தோனி, இந்திய அணியை முற்றிலுமாக மாற்றியமைத்து பல்வேறு சாதனைகளை படைக்க உதவினார். மேலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி 28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார்.
அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு உலக்கோப்பைக்கு பின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய தோனி, அணியில் விக்கெட் கீப்பராக மட்டுமே இருந்துவந்தார். பின்னர் தற்போது வரை அவர் ஆட்டம் குறித்து அவ்வபோது விமர்சனங்களும், நேர்மறை கருத்துக்களும் வருகின்றன. நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் கூட தோனியின் ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் அதிருப்திகரமான கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தோனி எப்போது தனது ஓய்வை அறிவிப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பியதோடு, அவர் மீது மோசமான விமர்சனங்களை தொடுத்தனர். பெரும்பாலும் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடும் தோனி, வங்கதேச அணிக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் மந்தமாக ஆடியதே இதுபோன்ற விமர்சனங்களுக்கு காரமணாக அமைந்தது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அலுவலர் ஒருவர் தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குபின் தோனியை நீக்க முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், பின்பு அவரின் அனுபவம் குறித்து பல வீரர்களின் கருத்தை ஆராய்ந்த போது தோனிக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கலாம் என்று முடிவு செய்தோம்.
தோனி ஒரு மிகச்சிறந்த வீரர். அவர் எப்போது எந்த முடிவை எடுப்பார் என்று யாராலும் கணிக்க முடியாது. எனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில், அதுவே தோனியின் இறுதிப்போட்டியாக இருக்கலாம். அதன்பின் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.