2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வில் இருக்கும், இந்திய அணி வீரர் தோனி சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், '' மும்பையை என்றும் என்னால் மறக்க முடியாது. ஏனென்றால் எனது வாழ்வின் மிக முக்கியமான மகத்தான இரண்டு நிகழ்வுகள் மும்பையில் தான் அரங்கேறியது.
முதல் நிகழ்வு என்னவென்றால், 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்டு மும்பை நகரைத் திறந்த பேருந்தில் சுற்றி வந்தோம். அப்போது எங்கு பார்த்தாலும் மக்கள் சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றனர். மிகப்பெரும் டிராஃபிக் உருவானது.
இரண்டாவது நிகழ்வு என்னவென்றால், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியின்போது வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் 'வந்தே மாதரம்' என ஒருகுரலில் பாடினர். அதனை மீண்டும் பிரதிபலிக்க முடியுமா எனத் தெரியாது. எனது வாழ்வின் மிகச் சிறந்த இரண்டு நிகழ்வுகள் இதுதான் '' என்றார்.
மேலும் ஜனவரி மாதம் வரை, கிரிக்கெட்டிற்கு எப்போது திரும்பப்போகிறீர்கள் எனக் கேட்க வேண்டாம் எனக் கூறினார். நீண்ட நாட்களுக்கு பிறகு விழாவில் கலந்துகொண்டு ஓய்வில் இருப்பது பற்றி, தோனி பேசியுள்ளது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதம் இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதால், தோனி அந்தத் தொடரில் இடம்பெறுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹிட்டராக மாறி டாப் ஆர்டர் இடத்தை விட்ட சின்ன தல ரெய்னா..!