ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஷபாஸ் நதீம் அறிமுகமானார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமாவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஷபாஸ் நதீம், சர்வதேச கிரிக்கெட்டில் தனது விக்கெட் கணக்கை தொடங்கினார்.
இப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து நதீம் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 202 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதோடு தொடரையும் 3-0 என்ற கணக்கில் மொத்தமாக கைப்பற்றியது.

ஜார்க்கண்ட்டை பூர்விகமாகக் கொண்ட நதீம் கடந்த 2004ஆம் ஆண்டு முதல், முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். இடக்கை சுழற்பந்து வீச்சாளாரான நதீம் இதுவரை 111 முதல் தரப் போட்டிகளில் 428 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளார். அதுமட்டுமல்லாது கடந்தாண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் தொடரில், ஜார்க்கண்ட் அணிக்காக களமிறங்கிய அவர் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் பத்து ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனைப் படைத்தார்.
இருப்பினும் நதீமிற்கு தேசிய அணியில் விளையாட 15 வருடங்கள் கழித்து தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தனது முதல் சர்வதேச போட்டி அனுபவம் குறித்து பேசிய நதீம், போட்டிக்கு முந்தைய நாளே தனக்கு அழைப்பு வந்ததாகவும், அன்றைய தினம் விமான சேவை இல்லாததால் மிக நீண்ட நேர சாலை வழிப் பயணத்திற்குப்பின் ராஞ்சியை அடைந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் போட்டி நடைபெறவிருந்த தினத்தன்று தானும் இந்திய அணியில் விளையாடப் போகிறேன் என்று கேப்டன் விராட் கோலி கூறியபோது ஆச்சர்யமடைந்தேன் என்றும் தெரிவித்தார்.
அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய வீரர்களைச் சந்தித்தார். அப்போது நதீமையும் சந்தித்த தோனி அவரிடம் சிறிது நேரம் உரையாடினார். அந்த உரையாடலின் போது நான் எப்படி விளையாடினேன் என்று தோனியிடம் கேட்டதாக கூறிய நதீம் அவர் கூறிய பதிலையும் பகிர்ந்துள்ளார்.
தோனியின் பதில், நான் உன் பவுலிங்கை பார்த்தேன். உனது விளையாட்டில் முதிர்ச்சி தெரிகிறது. இது உள்ளூர் கிரிக்கெட்டில் நீ பெற்ற அனுபவத்தால் வந்தது. வேறு மாதிரி எதுவும் முயற்சிக்காதே. இப்போது எப்படி விளையாடுகிறாயோ அதுபோன்றே தொடர்ந்து விளையாடு. உனது பயணம் தொடங்கிவிட்டது என்று அவர் கூறியதாக நதீம் தெரிவித்தார்.