உலகத்தையே அச்சறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிகாக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்கவுள்ளது. இதற்கான வலைபயிற்சியில் இரு அணி வீரர்களும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் நாளைய போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பதற்றத்தால் இப்போட்டிக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 22,000 இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தில் 40 விழுக்காடு டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையாகாமல் இருக்கிறது.
கொரோனா வைரஸால் தற்போது ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட கால்பந்து தொடரின் நாக் அவுட் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றுவருகிறது. அந்த வரிசையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரும் இணையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முன்னதாக, கொரோனா வைரஸ் காரணமாக இந்திய வீரர்களுடன் நாங்கள் கைகுலுக்க மாட்டோம் என தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 'ஃபினிஷிங்கில் தோனி தான் மாஸ்டர்': ஜஸ்டின் லாங்கர்