மும்பை கோகுல்தம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் கரண் திவாரி(27). தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினைப் போலவே பந்துவீசும் சாயலைப் பெற்றதால், கரணை அப்பகுதி மக்கள் ‘ஜூனியர் டேல் ஸ்டெயின்’ என்று அழைத்துவந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற கரண் திவாரியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வராததால், கடந்த சில மாதங்களாக மனவுளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இதனால் கரண், நேற்றிரவு தனது அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.