நாக்பூர்: சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியவர்களின் பட்டியலில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் தீபக் சாஹர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. முன்னதாக, நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இரு அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றதால் நேற்றைய போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
வங்கதேசத்தை சுருட்டிய சாஹர்
இப்போட்டியில், 175 ரன்கள் இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி, இந்திய வீரர் தீபக் சாஹரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 144 ரன்களுக்குச் சுருண்டது. மைதானத்தில் பனிப்பொழிவு இருந்தபோதிலும், சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் ஹாட்ரிக் உள்பட, ஏழு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
மெண்டிஸ் சாதனையை அசால்ட்டாக முறியடித்த சாஹர்
இதுமட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியவர்கள் (Best Bowling Figures) பட்டியலில் இவர் இலங்கை அணியின் முன்னாள் வீரர் அஜந்தா மெண்டிஸை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2012இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் மெண்டிஸ் எட்டு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதே, டி20 போட்டியில் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. இதுவரை இவரது சாதனையை யாரும் நெருங்க முடியாத நிலையில் தீபக் சாஹர் அதை அசால்ட்டாக முறியடித்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியவர்களின் விவரம்
பந்துவீச்சாளர் | ஓவர்கள் | ரன்கள் | விக்கெட்டுகள் | எதிரணி | இடம் | ஆண்டு |
தீபக் சாஹர் (இந்தியா) | 3.2 | 7 | 6 | வங்கதேசம் | நாக்பூர் | 2019 |
அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) | 4 | 8 | 6 | ஜிம்பாப்வே | ஹம்பன்டோட்டா | 2012 |
அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) | 4 | 16 | 6 | ஆஸ்திரேலியா | பாலக்கேலே | 2011 |
சாஹல் (இந்தியா) | 4 | 25 | 6 | இங்கிலாந்து | பெங்களூரு | 2017 |