ஐபிஎல் தொடரில் இன்று (அக்.14) நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் பிரித்வி ஷா, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 57 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் - ஜோஸ் பட்லர் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தனர். பட்லர் 22 ரன்களில் வெளியேற, அவரை தொடர்ந்து வந்த ஸ்மித்தும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டோக்ஸ் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய சாம்சன் 25 ரன்களிலும், உத்தப்பா 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.