கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 தொடர் நேற்று தொடங்கியது.
இத்தொடரின் முதல் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டி, மழைக் காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, களமிறங்கிய வாரியர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய சிம்ரான் ஹெட்மையர் 63 ரன்களையும், ராஸ் டெய்லர் 33 ரன்களையும் குவித்தனர்.
இதன் மூலம் அந்த அணி 17 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இறுதியில் 16.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சுனில் நரைன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று நாடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும் - பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணியும் மோதியது.
இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ட்ரைடென்ஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் 38 ரன்களையும், கைல் மேயர்ஸ் 37 ரன்களையும், ரஷீத் கான் 29 ரன்களையும் எடுத்தனர்.
இதன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை எடுத்தது.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணி ரஷீத் கான், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரது சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
இதன் மூலம் ட்ரைடென்ட்ஸ் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் சாண்ட்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை கைப்பற்றியது ட்ரீம் 11!