கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் ஸ்ரேத். இவர் ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் படித்துவருகிறார். தற்போது கரோனா வைரஸ் காரணமாக நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், உணவின்றி தவித்துவரும் அந்நாட்டு மக்களுக்கு இவர் உணவு வழங்கி, அவர்களின் பசியை போக்கிவருகிறார்.
இது குறித்து அறிந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம் ட்விட்டர் பக்கத்தின் காணொலியின் வாயிலாக ஸ்ரேயாஸ் ஸ்ரேத்திற்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய டேவிட் வார்னர், "கரோனா வைரஸ் காரணமாக உணவின்றி தவித்துவரும் மாணவர்களுக்கு உணவளிக்கும் நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஸ்ரேதுக்கு, நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் ஸ்ரேயாஸ் இந்தியாவிலிருந்து வந்து குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மேற்படிப்பை படித்துக்கொண்டே இதுபோன்ற தன்னலமற்ற செயல்களை செய்துவருவது பாராட்டுக்குரியது.
உங்கள் அம்மா, அப்பா மற்றும் இந்தியர்கள் உங்களை நினைத்து பெருமைப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். தொடர்ந்து இதுபோல தன்னலமற்ற செயல்களை செய்யுங்கள். ஏனென்றால் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் இதுபோன்ற தன்னலமற்ற செயலுக்காக இந்திய செவிலியரான ஷரோன் வெர்கீஸை பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்திய செவிலியின் முயற்சியை பாராட்டிய கில்கிறிஸ்ட்!