டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் கடந்த 12ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், மழையின் காரணமாக இப்போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இரு அணி வீரர்களும் லக்னோவுக்கு சென்றனர். இந்த நிலையில், உலக மக்களை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் காரணமாக இந்த ஒருநாள் தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதையடுத்து, நேற்று கொல்கத்தாவிலிருந்து புறப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள் இன்று அதிகாலை தங்களது சொந்த நாட்டிற்கு சென்றனர்.
இந்நிலையில், கோவிட் -19 வைரஸ் காரணமாக இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் 16 பேரும் அடுத்த 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கேட்டுகொண்டுள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்தில் வீரர்களில் யாருக்காவது கோவிட் -19 வைரஸ் அறிகுறி இருந்தால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்போம் என தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை மருத்துவர் மஜ்ரா தெரிவித்தார்.
இதையும் படிங்க: வங்கதேச அணியின் பேட்டிங் ஆலோசகராகிறாரா சஞ்சய் பங்கர்?